Last Updated:
2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இத்தேர்வின் கட் ஆப் மதிப்பெண் எவ்வ்ளவு இருக்கும் என்று தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது
TNPSC Group-4 Exam Cut Off marks: 2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு தேர்வு நடந்தது. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் பகிர்ந்து கொண்டதை பார்க்கலாம்.
இதுகுறித்து தேர்வர் முத்துசாமி கூறுகையில், நான் மூணு வருஷமா தேர்வு எழுதிட்டு வர்றேன். குரூப் 4 எக்ஸாம் பொறுத்தவரைக்கும் மொத்தம் 200 மார்க் கேள்விகள் கேட்கப்படும். அதுல 100 மார்க் தமிழ் பாடத்திலையும், கணித பாடத்தில் 25 மதிப்பெண்ணும், பொது அறிவில் 75 மதிப்பெண்ணும் கேட்கப்படும். சமீபத்திய காலங்களில் தமிழ்நாடோட வளர்ச்சி நிர்வாக முறைகளை பற்றிய கேள்விகள் அதிகம் இடம்பெறுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், இந்த ஆண்டு தேர்வில் கூட தமிழக அரசு சமீபத்தில வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. பொது அறிவுதாள் தான் கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்திருக்கு. இந்த முறை தமிழ்ல கேள்விகள் கொஞ்சம் கஷ்டமா கேட்டு இருக்காங்க. குரூப் 2வ விட குரூப் 4 தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததாகவும் தெரிவித்தார்.
கணக்கு பாடத்துல கேள்விகள் கஷ்டமாவும், ஈசியாவும் இருந்துச்சு. கலவையான உணர்வு கிடைத்தது. பொது அறிவு ஓரளவுக்கு யூகிக்கிற அளவுல தான் இருந்தது. தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததால இந்த முறை கட் ஆஃப் மார்க் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு முந்தைய தேர்வுகளில் எல்லாம் நேரடியான கேள்விகள் கேட்கப்படும். ஆனால் தற்போது நிறைய ஸ்டேட்மெண்ட் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதாவது ஏ,பி,சி,ஆப்ஷன் அந்த மாதிரி இல்லாமல். எந்தக் கூற்று சரி போன்ற பதில்கள் கொஞ்சம் குழப்பமடையும் வகையில் கேட்கப்படுகிறது. இது ஒரு விதத்தில் நல்லது என்றாலும் ஏற்கனவே நீண்ட ஆண்டுகளாக படித்தவர்களுக்குத் தான் இது எளிமையானதாக இருக்கும். எனவே நாம் படிக்கும் போதே நல்ல தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
July 13, 2025 4:22 PM IST
