Last Updated : 28 Oct, 2025 05:20 PM
Published : 28 Oct 2025 05:20 PM
Last Updated : 28 Oct 2025 05:20 PM

இந்திய டி20 அணியின் வளரும் நட்சத்திரமாக ஜொலிக்கும் பஞ்சாபைச் சேர்ந்த அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தால் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கன்சிஸ்டன்ட்’ ஜாஷ் ஹாசில்வுட் நிச்சயம் ஃபார்ம் அவுட் ஆகிவிடுவார் என்று முன்னாள் இந்திய உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பெருமை பொங்கக் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ஹாசில்வுட் இந்திய பேட்டர்களைப் படுத்தி எடுத்து விட்டார். ஆனால், அதுபோல் அபிஷேக் சர்மா இருக்கும் டி20 அணியில் ஹாசில்வுட் வீச சாத்தியமே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் அபிஷேக் நாயர்.
அபிஷேக் சர்மா இதுவரை 23 இன்னிங்ஸ்களில் 196 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணி எந்த அணியாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் சாத்தி எடுத்து வருகிறார். சமீபத்தில் முடிந்த ஆசியக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானின் ஷாஹின் ஷா அஃப்ரீடியின் முதல் பந்திலிருந்தே அவரைப் போட்டுத் தாக்கினார். அடித்து நொறுக்கும் ஃபார்மில் இருக்கிறார் அபிஷேக் சர்மா.
“அபிஷேக் சர்மா அதே அதிரடி ஃபார்மில் இருந்தால் ஹாசில்வுட் நிச்சயமாக ஃபார்மில் இருக்க மாட்டார். முதல் பந்தையே சிக்ஸ் அல்லது பவுண்டரிக்கு விரட்டிக் கொண்டிருக்கிறார் அபிஷேக் சர்மா. பவர் ப்ளேயில் எதிரணியினரிடம் பயத்தை உருவாக்கி விட்டால் அது இன்னிங்ஸ் முழுதும் தொடரும். அதுதான் அபிஷேக் சர்மா ஏற்படுத்தும் தாக்கம். அபிஷேக் 6 ஓவர்கள் பேட் செய்தால் இந்திய அணி 60-80 ரன்களைக் குவிக்கும். இதனால் அவருடன் பேட் செய்யும் இன்னொரு பேட்டருக்கு அழுத்தத்தைப் போக்கும்.
ஆனால், இப்படிச் சொல்லும்போது அபிஷேக் சர்மாவுக்கு சுலபம் இல்லை என்பதையும் நாம் கூற வேண்டும். ஹாசில்வுட் நல்ல ரிதமில் வீசி வருகிறார், கூடுதல் பவுன்ஸ் செய்கிறார். தென் ஆப்பிரிக்காவிலும் ஐபிஎல்-லும் ஆடி போதிய அனுபவம் பெற்றுள்ளார்.
அபிஷேக் சர்மா அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துபவர், தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொள்ள விரும்புபவர். இது அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவருக்கு ஒரு நல்ல மரியாதை கிடைத்தால் அவருக்கு அது திருப்திகரமாக இருக்கும்” என்றார்.
ஹாசில்வுட் முதல் 2 போட்டிகளுக்குத்தான் டி20 தொடரில் இருக்கிறார். அதன் பிறகு ஆஷஸ் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கவிருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!

