கொல்கத்தா: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பெங்கால் அணியின் ஷமி. இதன் மூலம் 141 ரன்களில் வெற்றி பெற்றது பெங்கால் அணி.
நடப்பு ரஞ்சி டிராபி சீசன் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. கடந்த 25-ம் தேதி பெங்கால் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது குஜராத் அணி.
முதல் இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பெங்கால் அணி. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய குஜராத் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பெங்கால் அணி 214 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் அணி விரட்டியது.
அந்த அணி 45.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 141 ரன்களில் பெங்கால் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் இந்த வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி முக்கிய அங்கம் வகித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.
35 வயதான ஷமி, இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பெறாமல் தவித்து வரும் இந்த வேளையில், அவரது செயல்பாடு கவனம் பெற்றுள்ளது. இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியை 8 விக்கெட்டுகளில் பெங்கால் அணி வீழ்த்தி இருந்தது. இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி, ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார்.
கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி டெஸ்ட் தொடரில் ஷமி விளையாடி இருந்தார். அதன் பின்னர் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெறாமல் உள்ளார். இந்திய-ஏ அணியிலும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம்.
‘நாட்டுக்காக மீண்டும் விளையாட வேண்டுமென ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் விரும்புவது உண்டு. நானும் என் மறு வாய்ப்புக்காக தயராக உள்ளேன். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது எனது பணி. மற்ற அனைத்தும் தேர்வாளர்கள் கையில் உள்ளது. நான் ஃபிட்டாக இருந்து, அணிக்காக விளையாட தயாராக இருக்க இவ்விரும்புகிறேன்” என குஜராத் உடனான ஆட்டத்துக்கு பிறகு ஷமி தெரிவித்தார்.
