கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டில் திருட முயன்ற நபர் சிசிடிவி உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம்
சூலூர் பூராண்டம் பாளையம்பாளையத்தைச் சேர்ந்த தனராஜ் என்பவரின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஒரு மகன் புனேவில் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனராஜ் இறந்து விட்டதால், சரோஜினி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அடித்துள்ளார். பல மணி நேரம் காலிங் பெல் அடித்தும் வீடு திறக்கப்படாததால், அந்த மர்ம நபர் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே வர முயற்சித்துள்ளார்.
சிசிடிவி காட்சி
உள்ளே இருந்த சரோஜினி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டை உடைக்க முயற்சிப்பது தெரிந்தது. உடனடியாக அண்டை வீட்டாரிடம் போன் செய்துள்ளார். அண்டை வீட்டார் அங்கு வருவதைப் பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
உடனடியாக இதுகுறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ராமநாதபுரம் கமுதி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்ற நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் சுல்தான்பேட்டையில் பதுங்கி இருந்த தர்மராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

