இந்த வேகமான, விரைவான, அதுவும் சென்னை மாதிரி போக்குவரத்து அதிகமான இடத்தில், ஒரு பொருளுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள நேரமிருக்கிறதா? இல்லையென்றே சொல்லத் தோன்றும். இருந்தாலும் பரவாயில்லை… இந்த வயர் கூடை குறித்து தெரியுமா? ஒரு காலத்தில், கட்டப்பைகளுக்கு முன்னால் ஆதிக்கம் செலுத்தியவை. இப்போது, வீட்டு மாடியிலோ, பரண்களிலோ தூசி படித்து கிடைக்கின்றன.
பாரம்பரியப் பொருட்கள் அல்ல… இப்போது இருக்கும் தலைமுறைக்குப் புரியும் மாதிரி சொல்லவேண்டுமென்றால்—’Aesthetic things’… Yes. இன்று எல்லாப் பழமைக்கும் ஒட்டப்படும் ஸ்டிக்கர் பெயர் தான் ‘Aesthetic’.
அந்த மாதிரி, நாம் சாதாரணம் என நினைக்கும் வயர் கூடைகள், இன்று உலகம் முழுக்கப் பறக்கின்றன. பெரிய ஸ்டார்ட்அப் இல்லாமல், கொஞ்சமாய் ஆட்களை வைத்து, அவர்கள் வாழ்க்கையே மாற்றும் வேலை, சத்தமே இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறது.
என் அம்மாவின் மறைவுக்குப் பின்னால், அவருடைய தோழி புஷ்பா அக்கா சென்னைக்கு வந்திருந்தார். எப்போதும் சென்னைக்கு வந்தாலும், அவர் பின்னிய வயர் கூடையைக் கொண்டு வருவார். ஒவ்வொரு முறையும், அம்மா அதிகமான கூடைகளை அவரிடம் வாங்குவார். இந்த முறை வரும் போது, அம்மா இல்லை… ஆனால் நான் வாங்கினேன். அப்போது தோன்றிய ஐடியா தான், ஏன் இந்த மாதிரி கையால் செய்யும் கூடைகளை, இணையத்தின் வழியே விற்கக் கூடாதென்று?
அதனால், அவர் பின்னிக் கொடுக்கிற கூடைகள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கம் ஆரம்பித்து, அதில் போட ஆரம்பித்தேன். மக்களிடையே இந்தக் கூடைகளுக்கான வரவேற்பு அதிகமாக இருந்ததால், ‘Start-up’ ஆகப் பதிவு செய்து, பெரிய அளவில் கொண்டு போகவேண்டும் என்று முடிவெடுத்தேன். புஷ்பா அக்கா மட்டும் அல்லாமல், இன்னும் நிறைய கூடை பின்னுபவர்களைக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் மாற்றுத்திறனாளிக்காக உருவாக்கப்பட்ட ‘Cheshire’ ஹோமில் இதுபோல கூடை பின்னுபவர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது.
அங்கு சென்று, அவர்கள் செய்த கூடைகளைப் பார்த்தபோது உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. இந்தக் காலத்திற்கு ஏற்றபடி, கூடைகளை மாடர்னாகவும், வித்தியாசமாகவும் பின்ன முடியுமா என்று. அவர்களையும் இதில் இணைத்துக் கொண்டேன். இவர்கள் ‘வயர் கடைக்கு’ வந்ததற்குப் பிறகே இதன் வளர்ச்சியும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகமானது என நம்பிக்கையுடன் கூறுகிறார் மிருணாளினி.
‘Cheshire Home’ மேலாளர் மாரி முத்து கூறுகையில்: சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு இல்லம் தொடங்கவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ‘Cheshire Home’. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதிகமாக உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்த, கூடை பின்னுவது, மற்ற கைவினைப் பொருட்கள் தயாரிப்பது போன்ற வேலைகளைச் செய்ய வைத்தோம். இது அவர்களுக்குப் பயிற்சியாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று ‘வயர் கடை’ மூலம், அவர்களுக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மாற்றம் மிகப்பெரியது. அவர்கள் தங்களுடைய செலவுகளையும், தேவையான பொருட்களையும் வாங்கி அழகாக வாழ முடிகிறது” என நெகிழ்கிறார்.
வயர் கடையின் அடிநாதமாக இருந்த புஷ்பா கூறுகையில்: “முன்பெல்லாம் வயர் கூடை பின்னுவேன். அப்போது அந்தக் கூடைகளை அடிமட்ட விலைக்கு வாங்கிச் செல்வார்கள். இப்போது ‘வயர் கடை’ மூலமாக, நாடு முழுக்க என் கூடைகள் போகின்றன. நான் செய்யும் ஒவ்வொரு கூடைக்கும் முன்னாடி, என்னுடைய விசிட்டிங் கார்டு இருக்கும். இதனால், நான் செய்யும் வேலைக்குச் சரியான பணமும், அங்கீகாரமும் கிடைக்கிறது. இதனால், இந்த வேலையை இன்னும் அதிகமாக, உற்சாகத்துடன் செய்ய முடிகிறது” என்று நெகிழ்ச்சியும்டன் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 13, 2025 12:21 PM IST
