Last Updated:
TN SET Exam Date Announced: ஒத்தி வைக்கப்பட்டிருந்த செட் தேர்வு மார்ச் மாதத்தில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய UGC நெட் தேர்வு நடத்துகிறது. அதே போல் மாநிலங்களினால் செட் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் செட் தேர்வை சுழற்சி முறையில் மாநில பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றன. அந்த வகையில் 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு செட் தேர்வை நடத்த திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்வுக்கு முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு காரணத்தினால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) செட் தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தேர்வர்கள் செட் தேர்விற்கான நாள் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: 100 Year Old Watch: டைம் டிராவல் செய்ய ஆசைன்னா இங்க போங்க… காலத்துடன் கலந்த கடை… 35 ஆண்டு பாரம்பரியம்…
இந்நிலையில் செட் (TN SET) தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடைபெறவுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடத்தத் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 14, 2025 4:56 PM IST

 
                    