இந்த மலைக்கோட்டையில் ஆன்மிகத் தலங்கள் மட்டும் தான் உள்ளதா என எண்ணினால் அது தான் இல்லை. வரலாற்றின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில், கடந்தகாலச் சான்றுகளைத் தாங்கி நிற்கும் குடைவரைக் கோவில்களும் இங்குள்ளது.
மலைமீது அமைந்துள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலமான கி.பி. 600-630ஆம் காலத்தில் அமைக்கப்பட்டது. லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம் என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்குரன் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும்.
இதையும் படிங்க: கர்ப்பிணியைத் தாய் போலக் கவனிக்கும் இறைவன்… இங்கு வழிபட்டால் சுகப்பிரசவம் தான்…
அதேபோல் மலைக்குக் கீழேயும் ஒரு குடைவரைக் கோவில் உள்ளது. இந்த குடைவரைக்கோவில் அளவில் பெரியது. இக்குடைவரைக் கோவில் நரசிம்ம பல்லவன் காலத்தது. குடைவரை செதுக்கப்பட்டுள்ள பாறைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. குடைவரையின் முன் வாசல் பகுதியில் கோவிலைத் தாங்கிய வண்ணம் நான்கு தூண்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
கோவிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கருவறைகளுக்கு முன்னே இடது, வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றது. கோவிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. கொற்றவையின் சிற்பத்திற்கு அடுத்து மற்றுமொரு கருவறை அமைந்திருக்கின்றது.
இந்தக் குடைவரையில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம் நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவறைப் பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வகைவகையாய் தயாராகும் கடலை மிட்டாய்… தீபாவளிக்கு 7 in 1 ஸ்பெஷல் வேற இருக்கு…
விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும், ஒரு பெண்ணின் சிற்பமும், வலது மற்றும் இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இடதுபுறக் கருவறையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.
மலைக்கோட்டைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்தாலும் இந்தக் குடைவரைக் கோவில் மலையின் அடிவாரத்தில், குடியிருப்புப் பகுதியில் நடுவே இருப்பதால் பெரும்பாலான மக்கள் அறியாத இடமாக உள்ளது. அதனால் இந்தக் குடைவரைக்கு மக்கள் வருகையும் குறைவாகவே உள்ளது. இந்தக் குடைவரைக் கோவிலுக்கு நீங்கள் சென்றால் நூற்றாண்டுக் கால வரலாற்றை நிதானமாகக் கண்டு அரிய முடியும். இந்தக் குடைவரை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
October 31, 2024 3:50 PM IST
குடியிருப்புப் பகுதிக்குள் மறைந்திருக்கும் குடைவரைக் கோவில்… திருச்சியில் ஒரு ஹிட்டன் ஸ்பாட்…
