Last Updated:
நாளை முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில் இந்த பிரபல கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் எனச் சொல்வார்கள். ஆனால் வயலுக்கு மத்தியில் அமைந்த தலமாகவும், இந்தத் தலத்தால் அந்த ஊரே வயலூர் என்னும் பெயரைப் பெற்றதுமானது தான் வயலூர் முருகன் கோவில். உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கோவிலில் முதன்மை தெய்வம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் கோவிலாகப் புகழ்பெற்றுள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை சமேதராக முருகர் வீற்றிருப்பதால் இது திருமணம் அதிகம் நடைபெறும் கோவிலாகவும் உள்ளது.
நவம்பர் 2ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி திருவிழாவிற்காக அனைத்து முருகன் கோவில்களும் விழாக்கோலம் பூண்டிருக்க வயலூர் முருகன் கோவில் மட்டும் எந்த பரபரப்பும் இல்லாமல் காணப்படுகிறது. இந்த வருடம் வயலூர் முருகன் கோவிலில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால் கந்த சஷ்டி திருவிழா, சூரசம்ஹார விழா இந்த வருடம் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…
இக்கோவிலில் ஏப்ரல் மாதம் திருப்பணிகள் துவங்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடைபெறும் எனக் கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆகையால் கோவிலைச் சுற்றி அனைத்துப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கும்பாபிஷேகப் பணிகள் காரணமாகக் கந்த சஷ்டி விழா நடைபெறாத பிரபலக் கோவிலாக வயலூர் முருகன் கோவில் உள்ளது. என்ன தான் கோவிலில் மராமத்து பணி நடைபெற்றாலும் பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணமே இருக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
November 06, 2024 7:23 PM IST
