Last Updated:
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பிப்ரவரி மாதத்தில் வரக்கூடிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.
மதுரை மாநகரம் என்று சொன்னாலே அனைவருக்கும் சட்டென்று நினைவில் வருவது அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டு தான். நம்முடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு என்று முதன்முதலாக அரங்கம் அமைக்கப்பட்ட இடமும் மதுரை மாவட்டம் தான். அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரை என்ற கிராமத்தில் மலையடிவாரத்தின் அடிப்பகுதியில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசின் உத்தரவின்படி சுமார் 44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்று வந்தது.
இதனை அடுத்து இதுவரை இந்த அரங்கம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் ஆகஸ்ட் 9 தேதி முதல் சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்படி ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அரங்கத்தில் மாவட்டத்தின் சுற்றுலா வருவாயை பெருக்கும்விதமாக சாகச சுற்றுலாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்தது. அதாவது இளம் தலைமுறையினரை கவரும் விதமாக மலையேற்றம், காத்தாடி விழா, ஏர் பலூன், ஜிப்லைன், சைக்களிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும்விதமாக, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் ஏர் பலூன் திருவிழாவும் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
இதனை அடுத்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி 1 முதல் 23ம் தேதி வரை உள்ள சனி, ஞாயிறுகளில் மாபெரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. அதாவது முதல் கட்டமாக அடுத்த மாதத்தில் வரும் சனி, ஞாயிறுகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பரதநாட்டியம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, இசைக் கச்சேரி போன்ற பலவிதமான நிகழ்ச்சிகள் இரவு நேரத்தில் மின்னொளி வெளிச்சத்துடன் கோலாவலமாக நடைபெற இருப்பதாக சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, வருகின்ற பிப்ரவரி 11 தைப்பூசத்தை முன்னிட்டு இரவு நேரத்தில் மாபெரும் இசை கச்சேரி நடைபெற இருப்பதால் மதுரை மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Madurai,Madurai,Tamil Nadu
February 01, 2025 10:07 AM IST

 
                    