இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரியதர்ஷினி செல்லத்துரை அசல் ஆட்டத்திறன் கொண்டவர் என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்பின் சேத்ரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் மங்கோலியா அணிக்கு எதிராக இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தி இருந்தார் பிரியதர்ஷினி. அதுவும் சர்வதேச அளவில் அவர் விளையாடிய இரண்டாவது ஆட்டத்தில் இந்த கோல்களை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பிரியதர்ஷினி? – திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சவளக்காரன் என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் பிரியதர்ஷினி. கால்பந்து விளையாட்டு சார்ந்த கட்டமைப்புகள் எதுவும் முறையாக இல்லாத அந்த கிராமத்தின் நெல் வயலில் பயிற்சி செய்த அவர்தான் இன்று இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அங்கிருந்து பெருங்கனவோடு புறப்பட்ட அவர் இன்று இந்திய அணிக்காக தாய்லாந்தின் சியான் மாய் நகரில் கோல் பதிவு செய்து அசத்தியுள்ளார். கடந்த மே மாதம் தான் சர்வதேச அளவில் அவர் அறிமுகமானார். அதிலிருந்து அடுத்த 24-வது நாளில் இந்திய அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

கனவு மெய்ப்பட்ட தருணம்: “இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என யோசித்தது உண்டு. இப்போது அந்த வாய்ப்பும் கிடைத்து, கோலும் பதிவு செய்துள்ளேன். நான் கோல் பதிவு செய்த தருணம் எனது கனவு மெய்ப்பட்ட தருணம் என்று சொல்லலாம். அது எனக்கு மகிழ்ச்சி தந்தது. அதை தவிர எனது உணர்வுகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் ஆறாம் வகுப்பு படித்தபோது கால்பந்து விளையாட தொடங்கினேன். எங்கள் பள்ளியின் சீனியர்கள் விளையாடுவதை பார்த்து தான் இந்த ஆர்வம் வந்தது. 2016-ல் தேசிய பள்ளி போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அது மணிப்பூரில் நடந்தது. அதுதான் தமிழகத்துக்கு வெளியில் நான் விளையாடிய முதல் தொடர்.

எங்கள் பகுதியில் பெண் பிள்ளைகள் விளையாட்டு கரியரை தேர்வு செய்வதெல்லாம் நடக்காத காரியம். அங்கிருந்து பல தடைகளை தாண்டிதான் இங்கு வந்துள்ளேன். எங்கள் ஊரில் எங்களுக்கு முறையான ஆடுகளம் கூட இல்லை. அதனால் நாங்கள் வயல்வெளியில் தான் பயிற்சி மேற்கொள்வோம். எனது பயிற்சியாளர் முத்துக்குமார் சார் எனக்கு உதவினார். அவர் தான் எனக்கு முதல் முறையாக விளையாடுவதற்கான ஷூவை வாங்கி கொடுத்தார். நாங்கள் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்ததும் அவர்தான். இப்போது கூட நான் ஊர் திரும்பியதும் அதே வயல்வெளியில் தான் பயிற்சி மேற்கொள்வேன்” என 22 வயதான பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

தமிழக அணிக்காக சிறந்த முறையில் ஆடியதன் மூலம் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பிரியதர்ஷினி பெற்றார். 2023-ல் சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஹரியானா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவரது கோல் மறக்க முடியாத ஒன்று. தமிழக அணி இந்த தொடரில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல அவரது ஆட்டம் உதவியது.

2024, 2025-ல் தேசிய போட்டிகளில் விளையாடிய அனுபவம், இந்தியன் வுமன்ஸ் லீக் அனுபவம், 2023-24 சீசனில் கேரள மகளிர் கால்பந்து லீகில் 24 கோல்கள் பதிவு செய்து கோகுலம் கேரளா கிளப் அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் உதவி செய்தார். இப்படி தொடர்ச்சியாக தொழில்முறை ரீதியான கால்பந்து போட்டிகளில் அசத்தியதன் மூலம் அவருக்கு விளையாட்டு கோட்டாவில் அரசு பணியும் கிடைத்தது. தற்போது ஊதியத்துடன் கூடிய விடுப்பில் தான் பிரியதர்ஷினி இந்திய அணிக்காக தாய்லாந்தில் விளையாடி வருகிறார்.

அசல் திறன் கொண்டவர்: “அணியில் உள்ள வீராங்கனைகளில் அசல் திறன் கொண்டவர்களில் பிரியதர்ஷினியும் ஒருவர். லீக் தொடர்களில் அவர் அதிகம் விளையாடவில்லை என்றாலும் அவருக்குள் இருக்கும் திறன் தான் அவருக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. அவரும் சிறப்பாகவே செயல்படுகிறார். இந்தியன் வுமன்ஸ் லீகில் விளையாடுவது அவருக்கு கள ரீதியான அனுபவத்தை இன்னும் பக்குவமடைய செய்யும். அவர் வரும் நாட்களில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கிறேன்” என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்பின் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தகவல் உறுதுணை: இந்திய கால்பந்து கூட்டமைப்பு

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *