துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் ‘பாகிஸ்தான்’ நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நாடு நடத்தும் நிலையில் ‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 – பாகிஸ்தான்’ என்ற லோகோ இந்திய அணியின் ஜெர்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. இந்திய அணி வரும் 20-ம் தேதி தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்துடன் விளையாடுகிறது. வரும் 23-ம் தேதி அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரில் குரூப் சுற்றில் விளையாடுகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியினர் தொடரை முன்னிட்டு பிரத்யேக புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எடுத்துக் கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அவை ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளன.

முன்னதாக, இந்திய அணியின் ஜெர்சியில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயர் இடம்பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள படங்கள் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா இந்த தொடரில் அறியப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *