திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு இன்று மாலை தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில்  தங்கமயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்ப திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்ப திருவிழா நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் இன்று காலை எழுந்தருளினார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானை உடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல இரவில் மின்னொளியிலும் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வன், பொம்ம தேவன் ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

