கோவை மாநகர காவல் இரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது, ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பார்சல் சர்வீஸ் சென்டர்கள், இரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில்வே பாதை ஆகிய பகுதிகள், காந்தி நகர், கண்ணப்ப நகர் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் மேன்ஷன்கள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் காவல் உதவி ஆணையர், 2 காவல் ஆய்வாளர்கள், 3 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50 ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 56 காவல் துறையினர் ஈடுபட்டனர்.
சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும், வெளியூர் மற்றும் வெளிமாநில சந்தேகப்படும் படி தங்கி இருக்கும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டும், கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போது கஞ்சா, போதை பொருள்கள் விற்பனை செய்த முன்னாள் குற்றவாளிகள் 8 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற திடீர் சோதனைகள் கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் என்று காவல் ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

